நோர்வே தமிழ்ச் சங்கம் வரலாற்றுச் சுருக்கம்
1979ம் ஆண்டுக்கு முன்னரும் பலர் Oslo நகரத்தில் வாழ்ந்திருப்பினும், 1979ம் ஆண்டு தைத்திருநாளில் நோர்வே தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1973 – 1975ம் ஆண்டுப்பகுதியில் இரண்டு ஈழத்தமிழர்களும், 1975 – 1979 காலப்பகுதியில் ஒன்பது ஈழத்தமிழர்களும் Oslo நகரில் வாழ்ந்திருந்தனர்.
1979ம் ஆண்டு Oslo வில் வாழ்ந்திருந்த ஒன்பது ஈழத்தமிழர்களும், ஆறு இந்தியத் தமிழர்களும், இரண்டு மலேசியத் தமிழர்களும் இணைந்து தமிழ்ச்சங்கத்தை ஆரம்பித்தனர். தமிழ்ச்சங்கத்தின் நோக்கமாக நோர்வே வாழ் உலகத்தமிழர்களிடத்தில் நெருங்கிய தொடர்பினைப்பேணுதலும், தமிழிலக்கியம், நாகரீகம் போன்றவற்றை இந்நாட்டு மக்களுடன் பரிமாறிக்கொள்ளுதல், அவர்களுடனான நல்லுறவை வலுப்படுத்துதல் போன்றவை அமைந்திருந்தன.
ஆரம்பகால உறுப்பினரும், தமிழ்ச்சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்குகொண்டவர்களான திரு. ரொபேர்ட் ஜெயனந்தன், திரு. சித்திவினாயக நாதன் ஆகியோர் இன்றுவரை தமிழ்ச்சங்கத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருவது இங்கு முக்கியமாக் குறிப்பிடப்படவேண்டியதொன்றாகும்.
காலப்போக்கில் காலத்தின் தேவைகருதி பல அரசியற்செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டு எமது மக்களுக்குரிய சேவைகளையும் தமிழ்ச்சங்கம் செய்துள்ளது. 1987ம் ஆண்டளவில் பல ஈழத்தமிழர்கள் நோர்வேக்கு வரத்தொடங்கினர். இது 2009ம் ஆண்டு போர் முடியும்வரையில் தொடர்ந்தது.
1987 – 1990ம் ஆண்டு காலத்தில் தமிழ்ச் சங்கத்தினால் ……….. என்னும் இடத்தில் மாதாந்த சந்திப்புக்கள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளின்போது சிறுவர் நிகழ்ச்சிகளும், தைப்பொங்கல், சித்திரை புதுவருடப்பிறப்பு, ஆண்டுவிழா, நத்தார் விழா என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன. 1987 காலப்பகுதியிலேயே தமிழ்ச் சங்கத்தினால் நோர்வே ரீதியாலான காற்பந்துப்போட்டிகள் தொடங்கப்பட்ட 2019ம் ஆண்டு இவை 40வது ஆண்டினைப் பூர்த்திசெய்கின்றமையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகளாகும்.1999ம் ஆண்டில் இருந்து 9, 12, 15 வயதுப்பிரிவினருக்கான உதைபந்தாட்டப்போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
1981ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தின் புணரமைப்புக்காக நிதிசேகரிக்கும் கலைநிகழ்வுடன் தமிழ்ச் சங்கத்தின் தாயகம்நோக்கிய செயற்பாடுகள் ஆரம்பமாகிய செயற்பாடுகள் 2018ம் ஆண்டுவரையில் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுபற்றி பின்பு விளக்கமாகப் பார்க்கலாம். பாரதியாரின் 100வது ஆண்டுநிறைவினை சிறப்பாக கொண்டாடிய நிகழ்வும் தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பகால நிகழ்வுகளில் முக்கியமானது.
1990ம் ஆண்டுவரையில் மேதின ஊர்வலங்களில் கலந்துகொண்டு தாயகத்தில் எம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, அடக்குமுறைகளை இந்நாட்டவருக்கு அறிவிக்கும் நடவடிக்கைகளில் தமிழ்ச்சங்கத்தின் பங்கு முக்கியமானது.
இக்காலகட்டத்தில் அரசியற்தஞ்சம் கோரியவர்களையும், மாணவர்களையும் மீளவும் இலங்கைக்கு அனுப்பும் நோர்வே அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து பல ஊர்வலங்கள், அடையாள அணிவகுப்புகள், உண்ணாவிரதப்போராட்டங்கள், இலங்கையில் தமிழர்கள்மேலான அடக்குமுறை போன்றவற்றை ஊடகங்களுக்கு வழங்கியது மூலமாக நோர்வே அரசு தனது தீர்மானத்தை மீள்பரிசோதனைக்கு உட்படுத்தி, தமிழர்களை மீளவும் இலங்கைக்கு அனுப்பும் தீர்மானத்தை மாற்றியமைப்பதற்கும் நோர்வே தமிழ்ச் சங்கம் வழங்கிய பங்களிப்பு முக்கியமானதாகும்.
1990ம் ஆண்டு ரூட்ஸ் இசைக்குழுவினர் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழாவில் இசைநிகழ்வினை வழங்கிய நிகழ்வில் இருந்து இன்றுவரை எமது கலைஞர்களை ஊக்குவித்தும், கௌரவித்தும் வருகிறது. 2017ம் ஆண்டு முதன் முதலாக நோர்வே தமிழ்ச் சங்கமே தாயகக்கலைஞர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்து அவர்களது திறமையை வெளிக்கொணர்ந்தது மட்டுமல்லாமல் தற்போது வருடந்தோறும் நாம் தாயகக்கலைஞர்களை இங்கு அழைத்து அவர்களை கௌரவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் திரு. முரளீதரன் முத்துலிங்கம் அவர்களது இறுவெட்டினை 1990ம் ஆண்டு தமிழ்ச்சங்கம் வெளியிட்டிருந்தது. 2000ம் ஆண்டு திரு. திலீபன் திருச்செல்வம் அவர்களது “கவிமலர்கள்” என்ற கவிதைத்தொகுப்பினையும் வெளியட்டமை குறிப்பிடத்தக்கது.
1992ம் ஆண்டு திரு சுதர்சன் பஞ்சலிங்கம் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக நோர்வே வாழ் தமிழர்களுக்கிடையில் மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1993ம் அண்டு நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இலட்சனையை சாந்தக்கண்ணா என்று அழைக்படும் திரு. சதானந்தன் விஜயேந்திரன் அவர்கள் உருவாக்கினார். திருமதி மல்லிகா நாகராஜா அவர்களால் எழுதப்பட்ட சங்ககீதமும் 1993ம் ஆண்டு மல்லிகா நாகராஜா, தவராஜா, அன்ரன் டேவிட், வாசுகி ஜெயபாலன், எலிசபெத் அல்பிரட் மற்றும் வேறுபலரின் குரலிசையில் பதிவுசெய்யப்பட்டது. தமிழ்ச்சங்க கீதத்திற்கான இசையமைப்பினை இசையமைப்பாளர் திரு. கணேசன் சுந்தரமூர்த்தி அவர்கள் வழங்கியிருந்தார்.
சங்கத்தின் வரலாறு தனியே மகிழ்ச்சியாக நிகழ்வுகளை மட்டும் கொண்டதல்ல. 1999ம் ஆண்டு எவரும் சங்கத்தினை தலமையேற்று நடாத்த முன்வராத நிலையில் ஸ்ரீ நவரட்ணம் அவர்களது தலையில் செயற்குழு உருவாக்கப்பட்டு சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தன.
(இதுவரை எழுதப்பட்டவை 25ம் ஆண்டுமலரில் திரு. நடராசா இளஞ்செழியன் எழுதிய “நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 25வது ஆண்டுப்பாதை என்னும் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது)
2017ம் ஆண்டு தொடக்கம் தமிழ்ச்சங்கத்தின் மெய்வல்லுனர்ப்போட்டிகள் என்னும் பெயர் மாற்றப்பட்டு “தமிழர் சங்கமம்” என்ற பெயரில் பல விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஒரு விளையாட்டுத்திருவிழா நடாத்துப்பட்டுவருகிறது. தற்போது தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நீச்சல்போட்டிகள், உள்ளரங்க காற்பந்தாட்டப்போட்டிகள், தமிழர் சங்கமம் விளையாட்டுப்போட்டிகள் என்று பல விளையாட்டுக்களை நடாத்திவருகின்றது. 2017ம் ஆண்டுதொடக்கம் தமிழ்ச்சங்கமானது பட்மின்டன் விளையாட்டுக்கழகமொன்றினை ஆரம்பித்து நோர்வே பட்மின்டன் சம்மேளனத்தின் போட்டிகளில் பங்குகொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த பட்மின்டன் கழகத்தில் வேறு பலநாட்டவர்களும் இணைந்திருப்பதும், எமது கழகமே Oslo மாவட்டத்தின் அதிகூடிய உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது விளையாட்டுக் கழகமாகும். தற்போது தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கம் ஒரு விளையாட்டரங்கத்தை Oslo மாவட்ட விளையாடுச்சம்மேளனத்திடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொதுக்குழு அனுமதிவழங்கியதை அடுத்து அதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்ச்சங்கத்தின் கலைநிகழ்வுகள் என தைப்பொங்கல், சித்திரை புதுவருடப்பிறப்பு, ஆண்டுவிழா ஆகியன நடைபெற்றுவருகின்றன. இத்துடன் 2017ம் ஆண்டில் இருந்து நோர்வே வாழ் பாடகர்களை ஊக்குவிக்குமுகமாகவும், தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்கு பாடகர்களை தெரிவுசெய்வதற்காகவும் மார்கழி மாதத்தில் ஒரு பாடல் நிகழ்வும் நடைபெற்றுவருகிறது. அதேவேளை 2017ம் ஆண்டு குரலிசைவித்துவான் திரு. அனந்த் வைத்தியநாதன் அவர்களின் பயிற்சிப்பட்டறையும் அதன் இறுதியில் மாணவர்களின் பாடல் நிகழ்வும் நடைபெற்றன.